மதினிமார்கள் கதை-எழுதியவர் , கோணங்கி
2021ம் ஆண்டுக்கான ‘விஜயா வாசகர் வட்ட கி.ராஜநாராயணன் விருது’ எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 5 லட்சம் விருதுத் தொகை. அநேகமாகத் தமிழில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதுத் தொகை இதுவாகத்தான் இருக்கும். கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. கிட்டத்தட்ட நூறு சிறுகதைகளும், நான்கு நாவல்களையும் எழுதியிருப்பதோடு, தமிழ் இலக்கியச் சூழலில் தனது மதிப்பைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கும் ‘கல்குதிரை’ எனும் சிற்றிதழை முப்பதாண்டுகளாகச் சீரற்ற இடைவெளிகளில் நடத்திவருகிறார். கல்மண்டபங்களிலிருந்து லோத்தல் கடலடி வரை, குன்றங்களிலிருந்து குகைகள் வரை இந்தியாவின் நாற்திசைகளிலும் பயணித்திருக்கிறார். ஒருமுறை லண்டன் பயணித்திருக்கிறார். ஒவ்வொரு நாவலுக்காகவும் ஓய்வில்லாது மரநிழல் படிந்த சாலைகளிலும், கடுமையான தெற்கத்தி வெயிலில் பாளம்பாளமாய் உடல் வெடித்திருக்கும் கருப்பு நிற நிலங்களிலும் பயணிப்பவர். முழு நேர எழுத்தாளர்களே அருகிப்போயிருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில், நீண்ட தொடர்ச்சியில் மிச்சமிருப்பவர். கூட்டுறவு வங்கி வேலையை எழுத்துக்காகவே உதறியவர். வெயில் உலைபோல் இருக்கும் கோவில்பட்டி நகரில் இருப்புப் பாதையின் அருகே உள்ள வீட்டில் வசிக்கிறார். நாடக ஆசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வழிப் பேரன், நேருவின் நண்பரும், பர்மாவில் தினகரன் நாளிதழைத் தொடங்கியவருமான தினகரனின் பேரனும் ஆவார். இருவரைப் பற்றியும் ‘த’ நாவலில் எழுதியுள்ளார்.
சுருங்கக் கூறின், ஓவியம் ஒன்றைச் சொற்களாக்க முனைந்தால் அவையே கோணங்கியின் படைப்புகள்..
கருத்துகள்
கருத்துரையிடுக